THIRUMANTHIRAM

Wednesday, January 20, 2021

Nineth Thanthiram – 05. Thula Panjakkaram

 Thirumanthiram of Thirumoolar

9ம் தந்திரம் - 05. தூல பஞ்சாக்கரம்


திருச்சிற்றம்பலம்


ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.  1 
அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.  2 
அகராதி ஈரெண் கலந்த பரையும்
உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன்
சிகராதி தான்சிவ வேதமே கோணம்
நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே.  3 
வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மேலே அவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே.  4 
கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது
மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்
அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே.  5 
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.  6 
தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே.  7 
குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே.  8 
வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.  9 
நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.  10 
பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.  11 


திருச்சிற்றம்பலம்

Nineth Thanthiram – 04. Oli

 Thirumanthiram of Thirumoolar

9ம் தந்திரம் - 04. ஒளி


திருச்சிற்றம்பலம்


ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே.  1 
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்ததும் அத்தா மரையிலே
இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே.  2 
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி யருள
வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்து நின்றானே.  3 
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே.  4 
மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம்
பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.  5 
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
துன்னியவாறுஒளி தூய்மொழி நாடொறும்
உன்னிய வாறுஒளி ஒத்தது தானே.  6 
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.  7 
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருத்தது தானே.  8 
இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.  9 
உளங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.  10 
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த
துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக்
கலங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட
விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே.  11 
போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி
நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே.  12 
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பி( வ ?)து
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.  13 
சுடருற ஓங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞானத் துறவியன் ஆமே.  14 
ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்செம்பொன் ஆதிப் பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி
ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே.  15 
ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.  16 
தானே யிருக்கும் அவற்றில் தலைவனும்
தானே யிருக்கும் அவனென நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பரவலும் ஆமே.  17 


திருச்சிற்றம்பலம்

Nineth Thanthiram – 03. Pranava Samadhi

 Thirumanthiram of Thirumoolar

9ம் தந்திரம் - 03. பிரணவ சமாதி


திருச்சிற்றம்பலம்


தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.  1 
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.  2 
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே.  3 
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி
சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே.  4 
மலையும் மனோபவம் மருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம்சித்த மாகும்
நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே.  5 
சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து
ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே.  6 


திருச்சிற்றம்பலம்

Nineth Thanthiram – 02. Gnanaguru Dharisanam

 Thirumanthiram of Thirumoolar

9ம் தந்திரம் - 02. ஞானகுரு தரிசனம்


திருச்சிற்றம்பலம்


ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.  1 
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே.  2 
ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே.  3 
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.  4 
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே.  5 
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.  6 
சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம்குரு பற்றே.  7 
மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்
சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே.  8 
தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
தானாம் பறவை வனமெனத் தக்கன
தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்
தானாம் தசாங்கமும் வேறுள்ள தானே.  9 
மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு
அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே.  10 
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்
பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு
நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்
தலைப்பட லாகும் தருமமும் தானே.  11 
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே.  12 
தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை
விலக்குறின் மேலை விதியென்றும் கொள்க
அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி நேடிக் கொள்வாரே.  13 
நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி
நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.  14 
வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்
இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே.  15 
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.  16 
பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு
உரிய பதியும்பா ராக்கி நின்றானே.  17 
அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்
தம்பர மல்லது தாமறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.  18 
கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.  19 


திருச்சிற்றம்பலம்

Nineth Thanthiram – 01. Gurumada Dharisanam

Thirumanthiram of Thirumoolar

9ம் தந்திரம் - 01. குருமட தரிசனம்


திருச்சிற்றம்பலம்


பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கென்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.  1 
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்
அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.  2 
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரியன் சிறப்பிலி எம்இறை
ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே.  3 
இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.  4 
முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி
அகம்பர மாதனம் எண்எண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே.  5 
அகமுக மாம்பீடம் ஆதார மாகும்
சகமுக மாம்சத்தி யாதன மாகும்
செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.  6 
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே.  7 


திருச்சிற்றம்பலம்

Tuesday, January 12, 2021

Eighth Thanthiram – 43. Chothanai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 43. சோதனை


திருச்சிற்றம்பலம்


பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
அம்மா னடிதந் தருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே.  1 
அறிவுடை யானரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
குறியுடை யானொடுங் கூடுவன் நானே.  2 
அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை யழகிய வாறே.  3 
குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்
தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ்
செறியாச் செறிவே சிவமென லாமே.  4 
காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை
காவலன் எங்குங் கலந்துநின் றானே.  5 
விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.  6 
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள
எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ்
சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே.  7 
தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.  8 
தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.  9 
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்
செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானே.  10 
எறிவது ஞானத் துறைவாள் உருவி
அறிவது னோடேயவ் வாண்டகை யானைச்
செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
பறிவது பல்கணப் பற்றுவி டாரே.  11 
ஆதிப் பிரான்தந்த வாளங்கைக்கொண்டபின்
வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை
சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே.  12 
அந்தக் கருவை யருவை வினைசெய்தற்
பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே.  13 
உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்
திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே.

எட்டாம் தந்திரம் முடிவு பெற்றது  14 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 42. Mutthiudaimai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 42. முத்தியுடைமை


திருச்சிற்றம்பலம்


முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.  1 
வளங்கனி தேடிய வன்றாட் பறவை
உளங்கனி தேடி யுழிதரும் போது
களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி
நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.  2 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 41. Bhakthiudamai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 41. பக்தியுடைமை


திருச்சிற்றம்பலம்


முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே.  1 
அடியார் அடியார் அடியார்க் கடிமைக்
கடியனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியா னிவனென் றடிமைகொண் டானே.  2 
நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்
பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.  3 
ஒத்துல கேழும் அறியா ஒருவனென்
றத்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப்
பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.  4 
ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்
நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே.  5 
பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்
முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்
பத்திப்பட் டோ ர்க்குப் பணியொன்றும் இல்லையே.  6 
பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகப்
குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே.  7 
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறிதுணை செய்து சிவனடி சிந்தித்
துறுதுணை யாயங்கி யாகிநின் றானே.  8 
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்
கானவன் என்றுங் கருவரை யானென்றும்
ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே.  9 
நிலைபெறு கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே.  10 


திருச்சிற்றம்பலம்

Sunday, January 10, 2021

Eighth Thanthiram – 40. Ava Arutthal

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 40. அவா அறுத்தல்


திருச்சிற்றம்பலம்


வாசியும் ஊசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே.  1 
மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.  2 
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.  3 
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே.  4 
உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன
துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே.  5 
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்தொழி லற்றுச் சுத்தம தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.  6 
உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை யருள்தான் அடைந்தபின் ஆறுமே.  7 
அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்
சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்
பவனிவன் பல்வகை யாமிப் பிறவி
புவனிவன் போவது பொய்கண்ட போதே.  8 
கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே.  9 
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.  10 


திருச்சிற்றம்பலம்

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...