THIRUMANTHIRAM

Wednesday, July 22, 2020

Third Thanthiram - 14. Kala Chakkaram

  Thirumanthiram of Thirumoolar


3ம் தந்திரம் - 14. கால சக்கரம்


திருச்சிற்றம்பலம்


மதிவட்ட மாக வரையைந்து நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு
மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே  1 
உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்
கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை 
அற்ற தறியா தழிகின்ற வாறே  2 
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே  3 
திருந்து தினமத் தினத்தினொடு நின்
றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே  4 
மனைபுகு வீரும் மகத்திடை நாடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே  5 
நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே  6 
ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதியங்க ணாள்விதித் தானே  7 
விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே  8 
முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரண மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே  9 
முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இட்ஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே  10 
நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்
சென்னியின் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும்
உன்னி யுணர்ந்திடும் ஓவியந் தானே  11 
ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே  12 
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே  13 
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே  14 
சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்
கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே  15 
கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி யமர்ந்திடு மொன்றே  16 
ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ்
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே  17 
கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே  18 
சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே

சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே  19 
உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டு ளயலறக் காண்பர்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்
குகங்கோடி கண்டங் குயருறு வாரே  20 
உயருறு வாருல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே  21 
காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாங்
காணகி லாமற் கழிகின்ற வாறே  22 
கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே  23 
கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே  24 
நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே  25 
கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறு மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே  26 
அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே  27 
அவனிவ நாகும் பரிசறி வாரில்லை
அவனிவ நாகும் பரிசது கேள்நீ
அவனிவ னோசை ஒளியினுள் ஒன்றிடும்
அவனிவன் வட்டம தாகிநின் றானே  28 
வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே  29 
காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே  30 

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...