Thirumanthiram of Thirumoolar
3ம் தந்திரம் - 21. சந்திர யோகம்
திருச்சிற்றம்பலம்
எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந் துய்யது சூக்கத்து தூலத்த காயமே 1
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் ஆகின்ற ஈரெட்டா டாறிரண் டீரைந்துள் ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே 2
ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப் பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு மாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே 3
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே 4
எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட் சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ்சூழ்கலை கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே 5
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர் சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக் கட்டப் படுந்தார கைகதிர் நாலுள கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே 6
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச் சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ் செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே 7
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத் தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு வங்கிய தாரகை யாகும் பரையொளி தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே 8
தரணி சலங்கனல் கால்தக்க வானம் அரணிய பானு அருந்திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவ மாகும் பெருநெறி தானே 9
தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத் தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத் தாரகை பூவிற் சகலத்தி யோனிகள் தாரகைத் தாரகை தானாஞ் சொரூபமே 10
முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும் பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும் அப்பதி னைஞ்சும் அறியவல் லார்க்கட்குச் செப்பரி யாங்கழல் சேர்தலு மாமே 11
அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத் தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப் பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத் திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே 12
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள் கன்றிய காலன் கருத்துழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே 13
அங்கி மதிகூட வாகும் கதிரொளி அங்கி கதிர்கூட வாகு மதியொளி அங்கி சசிகதிர் கூடவத் தாரகை தங்கி யதுவே சகலமு மாமே 14
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே 15
காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் காலை வலத்திட்டுப் பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல் ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே 16
பாலிக்கும் நெஞ்சம் 1பறையோசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங் காலைக்குச் சங்கு கதிரவன் தானே 17
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப எதிரவ னீச னிடமது தானே 18
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார் அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே 19
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல் வேதியன் அங்கே வெளிப்படுந் தானே 20
பாம்பு மதியைத் தினலுறும் பாம்பினைத் தங்கு கதிரையுஞ் சோதித் தனலுறும் பாம்பு மதியும் பகைதீர்த் துடங்கொளீஇ நீங்கல் 4கொடானே நெடுந்தகை யானே 21
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப் பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று நயந்தரு பூரணை உள்ள நடத்தி வியந்தரு பூரணை மேவுஞ் சசியே 22
சசியுதிக் கும்அள வுந்துயி லின்றிச் சசியுதித் தானேல் தனதூண் அருந்திச் சசிசரிக் கின்றள வுந்துயி லாமற் சசிசரிப் பின் கட்டன் கண்டுயில் கொண்டதே 23
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள் நாழிகை யாக நமனை அளப்பர்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழவல் லார் இச் சசிவன்ன ராமே 24
தண்மதி பானுச் சரிபூமி யேசென்று மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின் தண்மதி வீழ்வள விற்கண மின்றே 25
வளர்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந் தளர்கின்ற சந்திரன் தங்கலை யாறு மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே 26
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக் காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில் ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே 27
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ் சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும் ஈறிலி னன்கலை யீரைந்தொ டேமதித் தாறுட் கலையுள் அகலுவா வாமே 28
உணர்விந்து சோணி உறவினன் வீசும் புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில் உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே 29
விடாத மனம்பவ னத்தொடு மேவி நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக் கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே 30
அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற் குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச் சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே 31
உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந் தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத் தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங் கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே 32
மாறு மதியும் மதித்திரு மாறின்றித் தாறு படாமல் தண்டோடே தலைப்படில் ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும் பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமே 33 மூன்றாம் தந்திரம் முற்றிற்று
No comments:
Post a Comment