THIRUMANTHIRAM

Saturday, July 18, 2020

Third Thanthiram - 8. Dhiyanam

Thirumanthiram of Thirumoolar


3ம் தந்திரம் - 08. தியானம்


திருச்சிற்றம்பலம்


வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே  1 
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு)
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே 2 
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே  3 
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே 4 
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே  5 
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே  6 
நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ னாமே  7 
நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே  8 
மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே  9 
கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே  10 
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும்
ஓசை யதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே  11 
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே  12 
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே  13 
பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே  14 
கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே  15 
அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே  16 
இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே  17 
முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர்நிலை வானவர் கோனே  18 
நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே  19 
அறிவாய சத்தென்னு மாறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே  20 

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...