Thirumanthiram of Thirumoolar
2ம் தந்திரம் - 19. திருக்கோயில்
திருச்சிற்றம்பலம்
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 1
கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. 2
ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. 3
முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே. 4
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. 5
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment