Thirumanthiram of Thirumoolar
3ம் தந்திரம் - 06. பிரத்தியாகாரம்
திருச்சிற்றம்பலம்
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே 1
நாபிக்குக் கீழே பன்னிரெண் டங்குலந்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே 2
மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே 3
நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்
தேகத்துக் கென்றுஞ்சிதைவில்லை யாமே 4
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே 5
மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே 6
எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே 7
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே 8
புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே 9
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே 10
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment