Thirumanthiram of Thirumoolar
3ம் தந்திரம் - 07. தாரணை
திருச்சிற்றம்பலம்
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே 1
மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே 2
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே 3
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே 4
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கங்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே 5
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையுமாமே 6
வாழலு மாம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையே 7
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலு மாமே 8
முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே 9
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே 10
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment