Thirumanthiram of Thirumoolar
3ம் தந்திரம் - 12. கலை நிலை
திருச்சிற்றம்பலம்
காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்கலு மாமே 1
காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே 2
நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
அலைவற வாகும் வழியிது வாமே 3
புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே 4
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிப்பெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே 5
சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே 6
கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே அப்பங்கய மாகத்
தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே 7
தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலய மாகுமே 8
திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகில ராரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே 9
சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொள் ளீரே 10
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே 11
ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசியில் மூன்றும் நாவில் இரண்டுந்
தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே 12
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment