THIRUMANTHIRAM

Monday, July 27, 2020

Third Thanthiram - 19. Pariyanga Yogam

Thirumanthiram of Thirumoolar


3ம் தந்திரம் - 19. பரியங்க யோகம்


திருச்சிற்றம்பலம்


பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காயக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே  1 
போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே  2 
கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே  3 
அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே  4 
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே  5 
அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே  6 
பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே  7 
ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்ததே.  8 
ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே  9 
வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே  10 
வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே  11 
வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந்
திங்களிற் செவ்வாய் புதைத்திருந் தாரே  12 
திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்
துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே  13 
எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே  14 
வெளியை அறிந்து வெளியி னடுவே
ஒளியை அறியி னுளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே  15 
மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தி நடுவான வப்பொருள்
மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே  16 
மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னை தலைப்பெய்ய வல்லாரேன்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே  17 
வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே  18 
உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே  19 
பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே  20 

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...