Thirumanthiram of Thirumoolar
4ம் தந்திரம் - 01. அசபை
திருச்சிற்றம்பலம்
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே. 1
ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி ஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய் மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே. 2
தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந் தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந் தேவர் உறைகின்ற தென்பொது வாமே. 3
ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம் ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம் ஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே. 4
தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து தாண்டவ மானது அனுக்கிரகத் தொழில் தாண்டவக் கூத்துததனிநின்ற தற்பரம் தாண்டவக் கூத்துத் தமனியந் தானே. 5
தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலம் தானே. 6
தராதல மூலைக்குத் தற்பர மாபரன் தராதலம் வெப்பு நமசி வாயவாந் தராதலம் சொல்லில் தான்வா சியவாகும் தராதல யோகம் தயாவாசி யாமே. 7
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா இடம்என்ப ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்த மாமே. 8
ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும் ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை ஆனந்த மோடும் அறியவல் லார்கட்டு ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே. 9
படுவது இரண்டும் பலகலை வல்லார் படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் வாறே. 10
வாறே சதாசிவ மாறிலா ஆகமம் வாறே சிவகதி வண்டுறை பின்னையும் வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் வாறே பொதுவாகும் மன்றின் அமலமே. 11
அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் அமலம் திரோதாயி யாகுமா னந்தமாம் அமலம் சொல் ஆணவம் மாயை காமியம் அமலம் திருக்கூத்தங்கு ஆமிடம் தானே. 12
தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும் தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும் தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. 13
தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத் தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத் தலைவனு மாய்நின்ற தாளிணை தானே. 14
இணையார் திருவடி எட்டெழுத் தாகும் இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும் இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும் இணையார் கழலிணை ஏழா யிரமே. 15
ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய் ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகி ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம் ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே. 16
இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம் இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே. 17
தானே தனக்குத் தகுநட்டம் தானாகும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத் தானே உலகில் தனிநடந் தானே. 18
நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும் நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்து நடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம் நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே. 19
செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில் செம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம் செம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமெனச் செம்பொன் ஆன திருஅம் பலமே. 20
திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத் திருஅம் பலமாக ஈராறு கீறித் திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித் திருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே. 21
வாறே சிவாய நமச்சி வாயநம வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே. 22
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும் பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற் பொன்னாகும் வல்லோர்க்கு உடம்பு பொற் பாதமே 23
பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும் பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும் பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே. 24
சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவார் நயத்துட னேவரும் சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே. 25
சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல் சூக்கும மான வழியிடைக் காணலாம் சூக்கும மான வினையைக் கெடுக்கலாம் சூக்கும மான சிவனதுஆ னந்தமே. 26
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறிந்திட ஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திட ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும் ஆனந்தம் ஆம்ஹ்ரீம்ஹம் க்ஷம் ஹாம்ஆகுமே. 27
மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள மேனி இரண்டும் மிகார விகாரியா மேனி இரண்டும் ஊஆஈஏஓ என்று மேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்தாமே. 28
கூத்தே சிவாய நமமசி யாயிடும் கூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும் கூத்தே இஉஅஎஒ சிவயநம வாயிடும் கூத்தே ஈஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே. 29
ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட ஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாட ஒன்றினால் ஆடவோர் ஒன்பதும் உடனாட மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே. 30
No comments:
Post a Comment