THIRUMANTHIRAM

Wednesday, January 20, 2021

Nineth Thanthiram – 02. Gnanaguru Dharisanam

 Thirumanthiram of Thirumoolar

9ம் தந்திரம் - 02. ஞானகுரு தரிசனம்


திருச்சிற்றம்பலம்


ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.  1 
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே.  2 
ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே.  3 
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.  4 
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே.  5 
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.  6 
சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம்குரு பற்றே.  7 
மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்
சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே.  8 
தானான வண்ணமும் கோசமும் சார்தரும்
தானாம் பறவை வனமெனத் தக்கன
தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில்
தானாம் தசாங்கமும் வேறுள்ள தானே.  9 
மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி
உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு
அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே.  10 
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப்
பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு
நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில்
தலைப்பட லாகும் தருமமும் தானே.  11 
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே.  12 
தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை
விலக்குறின் மேலை விதியென்றும் கொள்க
அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி நேடிக் கொள்வாரே.  13 
நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி
நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.  14 
வந்த மரகத மாணிக்க ரேகைபோல்
சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம்
இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே.  15 
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.  16 
பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு
உரிய பதியும்பா ராக்கி நின்றானே.  17 
அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில்
தம்பர மல்லது தாமறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.  18 
கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.  19 


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...