Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 38. வாய்மை
திருச்சிற்றம்பலம்
அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. 1
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில் எல்லாம் அறிந்த இறையென லாமே. 2
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே. 3
தானே யுலகில் தலைவ னெனத்தகும் தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும் ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே. 4
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில் இருளற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே. 5
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும் மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே. 6
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப் பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக் கைகலந் தார்க்கே கருத்துற லாமே. 7
எய்திய காலத் திருபொழு துஞ்சிவன் மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும் பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில் ஐயனும் அவ்வழி யாகிநின் றானே. 8
எய்துவ தெய்தா தொழிவ திதுவருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின் மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே. 9
கைகலந் தானை கருத்தினுள் நந்தியை மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப் பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப் பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே 10
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங் கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே. 11
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின் மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப் பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே. 12
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற் செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே. 13
மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத் துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால் தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான் உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. 14
மனமது தானே நினையவல் லாருக்குக் கினமெனக் கூறு மிருங்காய மேவற் றனிவினி னாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. 15
No comments:
Post a Comment