Thirumanthiram of Thirumoolar
9ம் தந்திரம் - 08.5 பொற்றில்லைக் கூத்து
திருச்சிற்றம்பலம்
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 1
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. 2
ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. 3
கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. 4
மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம்
பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. 5
இடைபிங் கலைஇம வானோடு இலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்வொன்றி என்ற பரமாம் பரமே. 6
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 7
நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி
வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி
போதத்தில் ஆடிப் புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே. 8
தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்
கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. 9
ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும்
கூறு சமயக் குருபரன் நானென்றும்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. 10
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி
உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 11
ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 12
இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே. 13
No comments:
Post a Comment