THIRUMANTHIRAM

Friday, July 31, 2020

Fourth Thanthiram – 2. Thiru Ampala Chakkaram

Thirumanthiram of Thirumoolar


4ம் தந்திரம் - 02. திருஅம்பலச் சக்கரம்


 திருச்சிற்றம்பலம்

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனையொன்றில் எய்துவன் தானே.  1 
தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்வரன் தானே.  2 
அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.  3 
எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி யாலே.  4 
மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே.  5
ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.  6
இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்தாக
இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக
இருந்த அறையொன்றில் எய்துமகாரமே.  7
மகார நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டும்பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது வாமே.  8 
நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்
ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுவண் முகநம சிவாய
ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.  9 
ஆயும் சிவாய நமமசி வாயந
வாயு நமசிவா யயநம சிவாயந 
வாயுமே வாய நமசியெனு மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டந்தத் தடைவிலே.  10 
அடைவினில் ஐம்பதும் ஐயைந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.  11 
அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்
அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்
அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே.  12 
சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து
ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே.  13
அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஓகாரமதஞ்சாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.  14 
பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.  15 
இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.  16 
ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.  17 
அண்ணல் இருப்பது அவள்அக் கரத்துளே
பெண்ணின்நல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.  18 
அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.  19 
அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும் அங்கு உள்ளது
கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.  20
அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே.  21 
கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாமே.  22 
அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பியே 
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத்து ஓதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே.  23 
தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிடத்
தானே அளித்ததோர் கல்லொளி யாகுமே.  24 
கல்லொளி யேயென நின்ற வடதிசை
கல்லொளி யேயென நின்ற னன் இந்திரன்
கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.  25 
தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே.  26 
மறைய வனாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே.  27 
ஆகின்ற பாதமும் அந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயுரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.  28 
அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.  29 
பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே.  30 
ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை
நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.  31 
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப்
யாகொன்றி நிற்கும் பராபரன் தானே.  32 
பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்
பரமாய நவசிம பார்க்கில் மவயநசி 
பரமாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே.  33 
நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.  34 
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.  35 
கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.  36 
வெளியில் இரேகை இரேகையி லத்தலை
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரும் கால்கொம்பு நேர்விந்து நாதம்
தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.  37 
அகார உகார சிகார நடுவாய்
வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.  38 
அற்ற இடத்தே அகாரமது ஆவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே.  39 
அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்று என்னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.  40 
நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை
யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.  41 
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்திதந் தானே.  42 
நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.  43 
அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே.  44 
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்துஅகன் றார்களே.  45 
சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவிக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.  46 
அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறுமந் திரமே.  47 
விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.  48 
ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத்து ஒன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத்தாலே உயிர்பெற லாமே.  49 
ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.  50 
விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலையதாம்
சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே.  51 
ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.  52 
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.  53 
வீழ்ந்தெழ  லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.  54 
உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ
எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே.  55 
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.  56 
வேரெழத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து
ஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே.  57 
நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கியது
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு 
நாலாம் எழுத்தது நன்னெறி தானே.  58 
இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறுத் தேனே.  59 
ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை
ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.  60 
பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வர
நட்டமது ஆடும் நடுவே நிலயங்கொண்டு
அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே.  61 
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வருமுப் பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.  62 
நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.  63 
அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புக லாமே.  64 
ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.  65 
மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த போகமும் ஞானமும் ஆகும்
தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலே
அருள்தங்கி அச்சிவம் ஆவது வீடே.  66 
அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே.  67 
சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே.  68 
சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஓகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.  69
நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முதல் ஆகும் சதாசிவந் தானே.  70 
நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவமொன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம்ஒன்றி ஆய்பவர்ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.  71 
கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவர்கள்
தேடி அதனைத் தெளிந்தறி யீரே.  72 
எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.  73 
எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.  74 
தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆனஇம் மூவரோடு ஆற்றவ ராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே.  75 
பட்டனம் மாதவம் ஆறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே  76 
சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடுஒன்று ஆன
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.  77 
வித்தாம் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே.  78 
கண்டெழுந் தேன்கம லம்மலர் உள்ளிடை
கொண்டொழிந்தேன் உடன் கூடிய காலத்துப்
பண்டழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென வாமே.  79 
புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.  80 
ஆறெழுத்தாவது ஆறு மந்திரங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.  81 
எட்டினில் எட்டறை யிட்டோர றையிலே
கூட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்கு உமாபதி யானுண்டே.  82
நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல்
உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே.  83 
  பதிக வகை: தம்பனம்
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்
துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.  84 
  பதிக வகை: மோகனம்
கரண விறளிப் பலகை யமன்திசை
மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே.  85 
  பதிக வகை: உச்சாடனம்
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே.  86 
  பதிக வகை: மாரணம்
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.  87 
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே.  88 
  பதிக வகை: ஆகர்ஷணம்
எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொன்னொளி எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே.  89 
  

திருச்சிற்றம்பலம்

Thursday, July 30, 2020

Fourth Thanthiram - 1. Asapai

Thirumanthiram of Thirumoolar

4ம் தந்திரம் - 01. அசபை

திருச்சிற்றம்பலம்


போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.  1 
ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே.  2 
தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந்
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந்
தேவர் உறைகின்ற தென்பொது வாமே.  3 
ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே.  4 
தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து
தாண்டவ மானது அனுக்கிரகத் தொழில்
தாண்டவக் கூத்துததனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.  5 
தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே.  6 
தராதல மூலைக்குத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமசி வாயவாந்
தராதலம் சொல்லில் தான்வா சியவாகும்
தராதல யோகம் தயாவாசி யாமே.  7 
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.  8 
ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்டு
ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே.  9 
படுவது இரண்டும் பலகலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.  10 
வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை பின்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.  11 
அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்
அமலம் திருக்கூத்தங்கு ஆமிடம் தானே.  12 
தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.  13 
தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.  14 
இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.  15 
ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே.  16 
இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே.  17 
தானே தனக்குத் தகுநட்டம் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.  18 
நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும்
நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்து
நடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே.  19 
செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில்
செம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம்
செம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமெனச்
செம்பொன் ஆன திருஅம் பலமே.  20 
திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருஅம் பலமாக ஈராறு கீறித்
திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித்
திருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே.  21 
வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே.  22 
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்
பொன்னாகும் வல்லோர்க்கு உடம்பு பொற் பாதமே  23 
பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும்
பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும்
பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே.  24 
சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயத்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே.  25 
சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல்
சூக்கும மான வழியிடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதுஆ னந்தமே.  26 
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறிந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்
ஆனந்தம் ஆம்ஹ்ரீம்ஹம் க்ஷம் ஹாம்ஆகுமே.  27 
மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியா
மேனி இரண்டும் ஊஆஈஏஓ என்று
மேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்தாமே.  28 
கூத்தே சிவாய நமமசி யாயிடும்
கூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும்
கூத்தே இஉஅஎஒ சிவயநம வாயிடும்
கூத்தே ஈஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே.  29 
ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினால் ஆடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.  30 

திருச்சிற்றம்பலம்

Wednesday, July 29, 2020

Third Thanthiram - 21. Chanthir Yogam

Thirumanthiram of Thirumoolar

3ம் தந்திரம் - 21. சந்திர யோகம்


திருச்சிற்றம்பலம்


எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந்
துய்யது சூக்கத்து தூலத்த காயமே  1 
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டா டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே  2 
ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு
மாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே  3 
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே  4 
எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ்சூழ்கலை
கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே  5 
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படுந்தார கைகதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே  6 
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே  7 
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு
வங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே  8 
தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே  9 
தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தானாஞ் சொரூபமே  10 
முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னைஞ்சும் அறியவல் லார்க்கட்குச்
செப்பரி யாங்கழல் சேர்தலு மாமே  11 
அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத்
தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே  12 
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருத்துழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே  13 
அங்கி மதிகூட வாகும் கதிரொளி
அங்கி கதிர்கூட வாகு மதியொளி
அங்கி சசிகதிர் கூடவத் தாரகை
தங்கி யதுவே சகலமு மாமே  14 
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே  15 
காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே  16 
பாலிக்கும் நெஞ்சம் 1பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே  17 
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ னீச னிடமது தானே  18 
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே  19
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே  20 
பாம்பு மதியைத் தினலுறும் பாம்பினைத்
தங்கு கதிரையுஞ் சோதித் தனலுறும்
பாம்பு மதியும் பகைதீர்த் துடங்கொளீஇ
நீங்கல் 4கொடானே நெடுந்தகை யானே  21
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ள நடத்தி
வியந்தரு பூரணை மேவுஞ் சசியே  22 
சசியுதிக் கும்அள வுந்துயி லின்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் பின் கட்டன் கண்டுயில் கொண்டதே  23
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் லார் இச் சசிவன்ன ராமே  24
தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே  25 
வளர்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந்
தளர்கின்ற சந்திரன் தங்கலை யாறு
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே  26
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே  27 
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்
சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறிலி னன்கலை யீரைந்தொ டேமதித்
தாறுட் கலையுள் அகலுவா வாமே  28 
உணர்விந்து சோணி உறவினன் வீசும்
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே  29 
விடாத மனம்பவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே  30 
அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்
குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே  31 
உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே  32 
மாறு மதியும் மதித்திரு மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமே  33

மூன்றாம் தந்திரம் முற்றிற்று   


திருச்சிற்றம்பலம்

Tuesday, July 28, 2020

Third Thanthiram - 20. Amuritharanai

Thirumanthiram of Thirumoolar


3ம் தந்திரம் - 20. அமுரிதாரணை


திருச்சிற்றம்பலம்


உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே  1 
தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்
களிதருங் காயங் கனகம தாமே  2 
நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே  3 
கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே  4 
அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே  5 
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே  6 

திருச்சிற்றம்பலம்

Monday, July 27, 2020

Third Thanthiram - 19. Pariyanga Yogam

Thirumanthiram of Thirumoolar


3ம் தந்திரம் - 19. பரியங்க யோகம்


திருச்சிற்றம்பலம்


பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காயக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே  1 
போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே  2 
கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே  3 
அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே  4 
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே  5 
அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே  6 
பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே  7 
ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்ததே.  8 
ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே  9 
வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே  10 
வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே  11 
வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந்
திங்களிற் செவ்வாய் புதைத்திருந் தாரே  12 
திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்
துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே  13 
எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே  14 
வெளியை அறிந்து வெளியி னடுவே
ஒளியை அறியி னுளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே  15 
மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தி நடுவான வப்பொருள்
மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே  16 
மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னை தலைப்பெய்ய வல்லாரேன்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே  17 
வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே  18 
உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே  19 
பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே  20 

திருச்சிற்றம்பலம்

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...