THIRUMANTHIRAM

Monday, August 31, 2020

Sixth Thanthiram – 1. Sivagurudharisanam

 

Thirumanthiram of Thirumoolar


6ம் தந்திரம் - 01. சிவகுரு தரிசினம்


திருச்சிற்றம்பலம்


பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்தம் இறையே சிவகுரு வாமே.  1 
பாசத்தைக் கூட்டியே கட்டுப் பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த
தாசற்ற சற்குரு அம்பலமாமே.  2 
சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும்மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.  3 
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.  4 
தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே.  5 
சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணிவாரே.  6 
உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே.  7 
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.  8 
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.  9 
சித்தம் யாவையுஞ் சிந்தித் திருந்திடும்
அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே.  10 
தானந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.  11 
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே.  12 
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை
சத்தி யருள்தரில் தானெளி தாமே.  13 
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே.  14 
சிவமான ஞானந் தெளியவொண் சித்தி
சிவமான ஞானந் தெளியவொண் முத்தி
சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.  15 
அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே.  16 
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.  17 

திருச்சிற்றம்பலம்

Friday, August 28, 2020

Fifth Thanthiram – 20. Utchamayam

 

Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 20. உட்சமயம்

திருச்சிற்றம்பலம்


இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமயங்க ளாறும்தன் றாளிணை நாட
அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே.  1 
ஒன்றது பேரூர் வழியா றதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே.  2 
சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை
உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.  3 
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்
பவனவன் வைத்த பழிவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.  4 
ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதங்
காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே.  5 
அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ்
சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.  6 
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி யாமே.  7 
ஈரு மனத்தை யிரண்டற வீசுமின்
ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே
வாரு மரநெறி மன்னியே முன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.  8 
மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி
னயக்குறி காணில் அரநெறி யாமே.  9 
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.  10 
சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத் துளார்க்குவகுத்துவைத் தானே.  11 
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே.  12 
ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.  13 
ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே.  14 
ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே.  15 
அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை
அறியவொண் ணாத அறுவகை யாக்கி
அறியவொண் ணாத அறுவகைக் கோசத்
தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே.    16

ஐந்தாம் தந்திரம் முற்றிற்று  


திருச்சிற்றம்பலம்

Fifth Thanthiram – 19. Neeracharam

 Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 19. நிராசாரம்


திருச்சிற்றம்பலம்


இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.  1 
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.  2 
இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்
அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.  3 
தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் றானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே.  4 
அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டுங் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.  5 
மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.  6 
ஓங்காரத் துள்ளளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.  7 


திருச்சிற்றம்பலம்

Thursday, August 27, 2020

Fifth Thanthiram – 18. Puratchamaya Thoodanam

 Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 18. புறச் சமய தூடணம்


திருச்சிற்றம்பலம்


ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.  1 
உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.  2 
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.  3 
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.  4 
சிவமல்ல தில்லை யறையே சிவமாந்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு)
அவமல்ல தில்லை அறுசம யங்கள்
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே.  5 
அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியு முயன்றில ராதலான்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே.  6 
சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை யாமே.  7 
நூறு சமயம் உளவா நுவலுங்கால்
ஆறு சமயமவ் வாறுட் படுவன
கூறு சமயங்கன் கொண்டநெறிநில்லா
ஈறு பரநெறி யில்லா நெறியன்றே.  8 
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவமெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.  9 
மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்
முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி
இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே.  10 
சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராமவர்
காயம் விளைக்குங் கருத்தறி யார்களே.  11 
வழியிரண் டுக்குமோர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவறி வார்நெறி நாடநில் லாரே.  12 
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப்படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே.  13 
அரநெறி யப்பனை யாதிப் பிரானை
உரநெறி யாகி யுளம்புகுந் தானைப்
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனெறி யாவிடிற் பல்வகைத் தூரமே.  14 
பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.  15 
ஆன சமயம் அதுஇது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த வுருவது வாமே.  16 
அந்நெறி நாடி அமரர் முனிவருஞ்
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.  17 
உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான வங்கியு ளாங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.  18 
வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.  19 
வழிசென்ற மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே.  20 

திருச்சிற்றம்பலம்

Wednesday, August 26, 2020

Fifth Thanthiram – 17. Saddhinipatham

 Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 17. சத்திநிபாதம்


திருச்சிற்றம்பலம்


இருட்டறை மூலை யிருந்த கிழவி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி யவனை மணம்புரிந் தாளே.  1
தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புல னாடிய கொல்லையு மாமே.  2 
இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே யாதியருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயின் றானே.  3 
இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.  4 
  பதிக வகை: மந்ததரம்


மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே.  5
கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.  6 
செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.  7 
எய்திய காலங்கள் எத்தனை யாயினுந்
தையலுந் தானுந் தனிநா யகமென்பர்
வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.  8 
கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.  9 
  பதிக வகை: தீவிரம்

அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில் எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும் உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக் கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.  10
பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.  11 
தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.  12 
நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத வொருவன்
அணுகும் உலகெங்கு மாவியு மாமே.  13 
  பதிக வகை: தீவிரதரம்



இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.  14 
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ் செய்கின்ற குழலியை உன்னி
அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே.  15 
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ்
சாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து)
ஊனை விளக்கி யுடனிருந் தானே.  16 
  

திருச்சிற்றம்பலம்

Fifth Thanthiram – 16. Sayutchyam

 Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 16. சாயுச்சியம்


திருச்சிற்றம்பலம்


சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது
சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்
சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல்
சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே.  1 
சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்
சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத் தானந்த சத்தியே.  2 


திருச்சிற்றம்பலம்

Monday, August 24, 2020

Fifth Thanthiram – 15. Sarupam

 Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 15. சாரூபம்


திருச்சிற்றம்பலம்


தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்
தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே.  1 
சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகுஞ் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவன் கதிர்வடி வாமே.  2 


திருச்சிற்றம்பலம்

Fifth Thanthiram – 14. Sameepam

 Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 14. சாமீபம்


திருச்சிற்றம்பலம்


பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாச மருளான தாகும்இச் சாமீபம்
பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச் சியமே.  1 


திருச்சிற்றம்பலம்

Fifth Thanthiram – 13. Salokam

 Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 13. சாலோகம்


திருச்சிற்றம்பலம்

சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ்
சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால்
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்
பாலோகம் இல்லாப் பரனுரு வாமே.  1 
சமயங் கிரியையிற் றன்மனங் கோயில்
சமய மனுமுறை தானே விசேடஞ்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.  2 

திருச்சிற்றம்பலம்

Sunday, August 23, 2020

Fifth Thanthiram – 12. Dhasamarkkam

 Thirumanthiram of Thirumoolar

5ம் தந்திரம் - 12. தாச மார்க்கம்

திருச்சிற்றம்பலம்


எளியனல் தீப மிடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே.  1 
அதுவிது வாதிப் பரமென் றகல்வர்
இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடு
மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.  2 
அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.  3 
அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் றடிதொழக்
கண்ணவ னென்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.  4 
வாசித்தும் பூசித்தும்மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசத் திருந்த நினைவறி யாரே.  5 


திருச்சிற்றம்பலம்



Thursday, August 20, 2020

Fifth Thanthiram – 11. Sarpuththiramarkkam

 Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்


திருச்சிற்றம்பலம்


மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே.  1 
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மற்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.  2 
அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரையன்னந் தாமரை நீலங்
குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்
சிறுகால் அறநெறி சேரகி லாரே.  3 
அருங்கரை யாவது அவ்வடி நீழற்
பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை
வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாயுல கேழினொத் தானே.  4 
உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பிரிக்கிலப் பான்மைய னாமே.  5 
நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.  6 
திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை
உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே.  7 

திருச்சிற்றம்பலம்

Fifth Thanthiram – 10. Sagamarkkam

 Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 10. சகமார்க்கம்


திருச்சிற்றம்பலம்


சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்க ஞானத் துறுதியு மாமே.  1 
மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடார் 
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே.  2 
யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே.  3 
யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.  4 
ஆதார சோதனை யானாடி சுத்திகள்
மேதாதி யீரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாஞ்சக மார்க்கமே.  5 
பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி யெறிவ னயிர்மன வாளாற்
கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன்
வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே.  6 
வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.  7 


திருச்சிற்றம்பலம்

Tuesday, August 18, 2020

Fifth Thanthiram – 9. Sunmarkkam

 Thirumanthiram of Thirumoolar

5ம் தந்திரம் - 09. சன்மார்க்கம்


திருச்சிற்றம்பலம்


சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்
தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.  1 
சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே.  2 
தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே.  3 
தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.  4 
தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று
மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது
மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந்
தானவ னாயுறலானசன் மார்க்கமே.  5 
சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ்
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.  6 
சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே.  7 
சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப்
பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே.  8 
அன்னிய பாசமும் ஆகுங் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.  9 
பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்
தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே.  10 
மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர்
மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே.  11 


திருச்சிற்றம்பலம்

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...