THIRUMANTHIRAM

Monday, August 31, 2020

Sixth Thanthiram – 1. Sivagurudharisanam

 

Thirumanthiram of Thirumoolar


6ம் தந்திரம் - 01. சிவகுரு தரிசினம்


திருச்சிற்றம்பலம்


பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்தம் இறையே சிவகுரு வாமே.  1 
பாசத்தைக் கூட்டியே கட்டுப் பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த
தாசற்ற சற்குரு அம்பலமாமே.  2 
சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும்மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.  3 
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.  4 
தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே.  5 
சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணிவாரே.  6 
உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே.  7 
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.  8 
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.  9 
சித்தம் யாவையுஞ் சிந்தித் திருந்திடும்
அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே.  10 
தானந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.  11 
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே.  12 
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை
சத்தி யருள்தரில் தானெளி தாமே.  13 
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே.  14 
சிவமான ஞானந் தெளியவொண் சித்தி
சிவமான ஞானந் தெளியவொண் முத்தி
சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.  15 
அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே.  16 
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.  17 

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...