Thirumanthiram of Thirumoolar
5ம் தந்திரம் - 08. ஞானம்
திருச்சிற்றம்பலம்
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே. 1
சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம் உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ் சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ் சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. 2
தன்பால் உலகுந் தனக்கரு காவதும் அன்பா லெனக்கரு ளாவது மாவன என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே. 3
இருக்குஞ் சேம இடம்பிரமமாகும் வருக்கஞ் சராசர மாகும் உலகந் தருக்கிய ஆசார மெல்லாந் தருமே திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே. 4
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன் குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே. 5
ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள் ஏனம் விளைந்தெதி ரேகாண் வழிதோறுங் கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே. 6
ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமாம் மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந் தானிக் குலத்தோர் சரியை கிரியையே. 7
ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல் ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே. 8
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன் புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன் கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன் திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. 9
ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல் ஞான விசேடமே நாடு பரோதயம் ஞானநிர் வாணமே நன்றறி வானருள் ஞானாபி டேகமே நற்குரு பாதமே. 10
No comments:
Post a Comment