THIRUMANTHIRAM

Friday, August 28, 2020

Fifth Thanthiram – 20. Utchamayam

 

Thirumanthiram of Thirumoolar


5ம் தந்திரம் - 20. உட்சமயம்

திருச்சிற்றம்பலம்


இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமயங்க ளாறும்தன் றாளிணை நாட
அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே.  1 
ஒன்றது பேரூர் வழியா றதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே.  2 
சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை
உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.  3 
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்
பவனவன் வைத்த பழிவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.  4 
ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதங்
காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே.  5 
அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ்
சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.  6 
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி யாமே.  7 
ஈரு மனத்தை யிரண்டற வீசுமின்
ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே
வாரு மரநெறி மன்னியே முன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.  8 
மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி
னயக்குறி காணில் அரநெறி யாமே.  9 
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.  10 
சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத் துளார்க்குவகுத்துவைத் தானே.  11 
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே.  12 
ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.  13 
ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே.  14 
ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே.  15 
அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை
அறியவொண் ணாத அறுவகை யாக்கி
அறியவொண் ணாத அறுவகைக் கோசத்
தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே.    16

ஐந்தாம் தந்திரம் முற்றிற்று  


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...