Thirumanthiram of Thirumoolar
5ம் தந்திரம் - 06. கிரியை
திருச்சிற்றம்பலம்
பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்
டெத்திக்கி லவரில்லை என்பதின் அமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. 1
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. 2
கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழு
மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே. 3
இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவள் ஒரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே. 4
பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே. 5
அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
என்பினுட் சோதி இலங்குகின் றானே. 6
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment