Thirumanthiram of Thirumoolar
1ம் தந்திரம் - 11. அக்கினி காரியம்
திருச்சிற்றம்பலம்
வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையும் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. 1
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே. 2
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. 3
போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 4
நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரு மந்திரமும் என்றும்
செய்நின்ற செல்வமும் தீயது வாமே. 5
பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே. 6
பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத்து இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே. 7
ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே. 8
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே. 9
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 10
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment