THIRUMANTHIRAM

Thursday, June 11, 2020

First Thanthiram - 2. Yakkai Nilaiyamai


                                                Thirumanthiram of Thirumoolar


1ம் தந்திரம் - 02. யாக்கை நிலையாமை


                                                                திருச்சிற்றம்பலம்


மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.  1 
பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.  2 
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.  3 
காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறி யாதே.  4 
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே.  5 
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.  6 
மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே.  7 
வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.  8 
கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.  9 
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.  10 
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.  11 
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.  12 
மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.  13 
வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.  14 
ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.  15 
வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.  16 
ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.  17 
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.  18 
மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.  19 
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே.  20 
முட்டை பிறந்தது முந்_று நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே.  21 
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.  22 
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்
குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே.  23 
குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதனார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.  24 
காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே.  25 

                                                            திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...