Thirumanthiram of Thirumoolar
1ம் தந்திரம் - 04. இளமை நிலையாமை
திருச்சிற்றம்பலம்
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே. 1
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 2
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே. 3
விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே. 4
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 5
காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய் தானே. 6
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே. 7
கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 8
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 9
எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. 10
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment