Thirumanthiram of Thirumoolar
பாயிரம் - 3 ஆகமச் சிறப்பு
திருச்சிற்றம்பலம்
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. 1
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் யானே(1).
பா-ம்: 1) நானே 2
பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 3
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 4
பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 5
சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. 6
பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. 7
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 8
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 9
அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. 10
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment