THIRUMANTHIRAM

Saturday, June 20, 2020

First Thanthiram - 12. Anthanar Ozhukkam


Thirumanthiram of Thirumoolar


 1ம் தந்திரம் - 12. அந்தண ரொழுக்கம்


திருச்சிற்றம்பலம்


அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.  1 
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே.  2 
காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.  3 
பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே.  4 
சத்திய மும்தவம் தானவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.  5 
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே.  6 
நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.  7 
சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.  8 
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.  9 
மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதெரிந்து அந்தண ராமே.  10 
அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.  11 
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது 
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே.  12 
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடை யோரே.  13 
தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது

*இம்மந்திரத்தின் இரண்டு அடிகள் கிடைத்தில.  14 
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே

*இம்மந்திரத்தின் இரண்டு அடிகள் கிடைத்தில.  15 

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...