Thirumanthiram of Thirumoolar
1ம் தந்திரம் - 21. கேள்வி கேட்டமைதல்
திருச்சிற்றம்பலம்
அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே. 1
தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே. 2
மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே. 3
பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே. 4
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே. 5
விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. 6
சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவர் அன்றே. 7
உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. 8
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. 9
வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே. 10
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment