THIRUMANTHIRAM

Monday, June 8, 2020

Payiram - 5 Thirumoolar Varalaru

                                        Thirumanthiram of Thirumoolar


பாயிரம் - 05. திருமூலர் வரலாறு


                                                            திருச்சிற்றம்பலம்



நந்தி திருவடி யான்தலை மேற்கொண்டு புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய் தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும் சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.  1


செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே.  2


இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே பொருந்திய செல்வப் புவனா பதியாம் அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன் பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.  3


சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனி யாதிருந் தேனின்ற காலம் இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி உதாசனி யாதுடனே உணர்ந் தோமால்.  4


மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.  5


நேரிழை யாவாள் நிரதிச யானந்தப் பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள் சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.  6


சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.  7


இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.  8


பின்னைநின்று என்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.  9


ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள் ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.  10


செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன் வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப் பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால் ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.  11


சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் உத்தம மாகவே ஓதிய வேதத்தின் ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே.  12


யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.  13


பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே.  14


அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான் எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும் தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.  15


அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.  16


பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் நற்பத முமளித் தானெங்கள் நந்தியே.  17


ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை ஆயத்தை யச்சிவன் தன்னை யகோசர வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.  18


விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து வளப்பில் கயிலை வழியில்வந் தேனே.  19


நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நானிருந் தேனே.  20


இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனும் சோமனும் ஆரழல் வீச உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.  21


பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை இயற்றிகழ் சோதி இறைவனு மாமே.  22

                                                        திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...