Thirumanthiram of Thirumoolar
2ம் தந்திரம் - 02. பதிவலியில் வீரட்டம் எட்டு
திருச்சிற்றம்பலம்
கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. 1
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே. 2
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே. 3
எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்1
பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.
பா-ம் : 1யோகிபாற் 4
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே. 5
முத்தீ கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே. 6
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. 7
இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. 8
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment