THIRUMANTHIRAM

Tuesday, October 6, 2020

Seventh Thanthiram – 14. Adiyar Perumai

 Thirumanthiram of Thirumoolar

7ம் தந்திரம் - 14. அடியார் பெருமை

திருச்சிற்றம்பலம்


திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.  1 
அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.  2 
கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்
உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே.  3 
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே.  4 
பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.  5 
இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே.  6 
அகம்படி கின்றநம் ஐயனை ஒரும்
அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே.  7 
கழிவும் முதலும் காதல் துணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே  8 
என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே.  9 
துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே.  10 
தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.  11 
அறியாப் பருவத்து அரன்அடி யாரைக்
குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே.  12 
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயமது ஆமே.  13 
முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்
எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து
எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.  14 
சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே.  15 
மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்
மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே.  16 


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...