Thirumanthiram
of Thirumoolar
7ம் தந்திரம்
- 22. ஆதித்த நிலை
திருச்சிற்றம்பலம்
செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி தஞ்சுட ராக வணங்கும் தவமே. 1
பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம் புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன் இகலற ஏழுல கும்உற வோங்கும் பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே. 2
ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும் சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே. 3
தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும் தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும் தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும் தானே உலகுக்குத் தண்சுட ராகுமே. 4
வலையமுக் கோணம் வட்டம் அறுகோணம் துலையிரு வட்டம் துய்ய விதழ்எட்டில் அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம் மலைவற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே. 5
ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில் சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம் கேத முறுங்கேணி சூரியன் எட்டில் சோதிதன் நீட்டில் சோடசம் தானே. 6
ஆதித்த னோடே அவனி இருண்டது பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற வேதப் பொருளை விளங்குகி லீரே. 7
பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள் நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே. 8
மண்ணை இடந்துஅதின் கீழொடும் ஆதித்தன் விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும் கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம் எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே. 9
பாரை இடந்து பகலோன் வரும்வழி யாரும் அறியார் அருங்கடை நூலவர் தீரன் இருந்த திருமலை சூழ்என்பர் ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. 10
No comments:
Post a Comment