Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 21. விந்து ஜயம் - போக சரவோட்டம்
திருச்சிற்றம்பலம்
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப் பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. 1
தானே அருளால் சிவயோகம் தங்காது தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும் தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும் ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே. 2
மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில் ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள் ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே. 3
ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம் வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும் ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே. 4
செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே எய்யும் கலைகாலம் இந்து பருதிகால் நையுமிடத்து ஓடி நன்காம நூல்நெறி செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. 5
விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல் நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப் படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக் கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே. 6
கொண்ட குணனே நலமேநற் கோமளம் பண்டை உருவே பகர்வாய் பவளமே மிண்டு தனமே மிடைய விடும் போதில் கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே. 7
விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மைசீர்ப் பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே. 8
பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும் மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே. 9
வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை வித்தினில் வித்தை விதற உணர்வரேல் மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. 10
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும் கருத்துளன் ஈசன் கருஉயிரோடும் கருத்தது வித்தாய்க் காரண காரியம் கருத்தறு மாறுஇவை கற்பனை தானே. 11
ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும் அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி ஒழியாத புத்தி தபஞ்செப மோனம் அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. 12
வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித் துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்று முற்று மதியத்து அமுதை முறைமுறை செற்றுண் பவரே சிவயோகி யாரே. 13
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும் ஆகிய விந்து அழியாத அண்ணலே. 14
அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும் மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே. 15
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும் பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள் அறிவாய் நனவில் அதீதம் புரியச் செறிவாய் இருந்து சேரவே மாயுமே. 16
மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக் காதலது ஆகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும் சோதியின் உள்ளே துரிசறும் காலமே. 17
காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன் காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன் காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை காலின்கண் வந்த கலப்பறி யாரே. 18
கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல் நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக் கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை விலக்கு வனசெய்து மேலணை வீரே. 19
மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும் கோலால் நடத்திக் குறிவழி யேசென்று பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால் மாலா னதுமான மாளும் அவ்விந்துவே. 20
விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும் அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும் நந்திய நாசமும் நாதத்தால் பேதமும் தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. 21
விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச் சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே. 22
அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள அமுதப் புனலோடி அங்கியின் மாள அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே. 23
யோகம் அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்து ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப் போகம் சிவபோகம் போகிநற் போகமா மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. 24
மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலி னால்விடார் யோகம் கலந்தவர் மாதர் உயிராசை கைக்கொண்டே வாடுவர் காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே. 25
சாற்றிய விந்து சயமாகும் சத்தியால் ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு ஆற்றி அமுதம்அருந்தவித் தாமே. 26
விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச் சிந்தனை மாறச் சிவம்அக மாகவே விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. 27
வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன் வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பவன் வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன் வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே. 28
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட வன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே. 29
அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம் அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே. 30
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய் ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை சென்று பராசக்தி விந்து சயந்தன்னை ஒன்ற உரைக்க உபதேசம் தானே. 31
தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை வானே உயர்விந்து வந்த பதினான்கு மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே. 32
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம் அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும் விந்து அடங்க விளையும் சிவோகமே 33
வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப் பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. 34
விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப் சந்திர னோடே தலைப்படு மாயிடில் அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும் அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே. 35
மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. 36
சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர் மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே. 37
உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம் விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி கருமுலை மீமிசை கைக்கீழிற் காலாம் விரவிய கந்தரம் மேல்வெளி யாமே. 38
No comments:
Post a Comment