THIRUMANTHIRAM

Saturday, October 10, 2020

Seventh Thanthiram – 20. Vinthurpanam

Thirumanthiram of Thirumoolar

7ம் தந்திரம் - 20. விந்துற்பனம்

திருச்சிற்றம்பலம்


உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதி கள்மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே.  1 
செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்
செய்திடும் நாதபேதத்திற னாலாறும்
செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம்
செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே.  2 
வந்திடு பேத மெலாம்பர விந்து
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.  3 
விளங்கு நிவர்த்தாதி மேவக ராதி
வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.  4 
அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்
வந்த வியாபி எனலாய அந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே.  5 
வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே.  6 
புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே.  7 
கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற
நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்
கண்டக லாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே.  8 
அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேஉள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே.  9 
வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல
அத்தன்மை யாகும் அரநெறி காணுமே.  10 
அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே.  11 
இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்
உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்
மருவிய விந்து வளரும்கா யத்திலே.  12 
காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்
காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.  13 
அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார் 
அழிகின்ற காயத்து அழிந்துஅயர் வுற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே.  14


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...