THIRUMANTHIRAM

Friday, December 25, 2020

Eighth Thanthiram – 35. Ilakkanath Thirayam

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்


திருச்சிற்றம்பலம்


விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத்
தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்
விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்
சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே.  1 
வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்
கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
இல்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிரெதி ராமே.  2 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 34. Mutthininthai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 34. முத்திநிந்தை


திருச்சிற்றம்பலம்


பரகதி யுண்டென இல்லையென் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.  1 
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லாரவன் செய்த பரிசறிந்
தாடவல் லாரவர் பேறெது வாமே.  2 
புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி
அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன்
இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே  3 
திடரிடை நில்லாத நீர்போல் ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலஞ்சேரு மாபோல்
அடலெரி வண்ணனும் அங்குநின் றானே.  4 
தாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும்
போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்
காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்
தீநெறி செல்வான் திரிகின்ற வாறே.  5 
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையுங் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை யுன்னகி லாரே.  6 
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவார் குடக்கும் குணக்கும் குறிவழி
நாவினின் மந்திர மென்று நடுவங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.  7 
மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.  8 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 33. Sutthasuttham

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 33. சுத்தாசுத்தம்


திருச்சிற்றம்பலம்


நாசி நுனியினின் நான்மூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை யம்மறை
கூசி யிருக்குங் குணமது வாமே.  1 
கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்
துரிமையுங் கன்மமும் உன்னும் பிறவிப்
கருவினை யாவது கண்டகன் றன்பின்
புரிவன கன்மக் கயத்துட் புகுமே.  2 
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லை கருத்தில்லை தானே.  3 
மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்
கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்
ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.  4 
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.  5 
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார்
ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின்
ஆசூச மானிடம் ஆசூச மாமே.  6 
ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே.  7 
வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.  8 
தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை
தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூயனல் தூயவு மாமே.  9 
தூயது வாளா வைத்தது தூநெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமா சித்தியும்
தூயது வாளாத் தூயடிச் சொல்லே.  10 
பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.  11 
வினையா மசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்
வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே.  12 


திருச்சிற்றம்பலம்

Friday, December 18, 2020

Eighth Thanthiram – 32. Onpan Avathai – Onpan Apimani

 

Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 32. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி


திருச்சிற்றம்பலம்


தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கெற்பனவ் யாகிர்தன்
பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.  1 
நவமாம் அவத்தை நனவாதி பற்றிற்
பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவிற்
றுவமார் துரியஞ் சொருபம தாமே.  2 
சிவமான சிந்தையிற் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போதந்
தவமான மவையாகித் தானல்ல வாகுமே.  3 
முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்
தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள
பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன்செய்த வாண்டவன் றான்சிறந் தானே.  4 
உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி
அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினை யோடறுத் தானே.  5 
நலம்பல காலந் தொகுத்தன நீளங்
குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்
பலம்பல பன்னிரு கால நினையும்
நிலம்பல வாறினன் நீர்மையன் றானே.  6 
ஆதி பராபர மாகும் பராபரை
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
ஓதுங் கமைமாயே யோரிரண் டோர்முத்தி
நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.  7 
தேராத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாத நரக சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே.  8 
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலு நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.  9 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 31. Ettythazha Kamala Mukkuna Avathai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை


திருச்சிற்றம்பலம்


உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்
நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே.  1 
ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்
மருங்கிய மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே.  2 
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்
எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்
பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே.  3 
ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.  4 
திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்
வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து
முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே.  5 
ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்
வாழும் பரமென் றதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வது வான தனித்தன்மை தானே.  6 
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்
செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே  7 
புரியும் உலகினிற் பூண்டவெட் டானை
திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்
எரியு மழையும் இயங்கும் வெளியும்
பரியுமா காசத்திற் பற்றது தானே.  8 
ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.  9 
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவடை யோரே.  10 


திருச்சிற்றம்பலம்

Wednesday, December 16, 2020

Eighth Thanthiram – 30. Puramkuramai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 30. புறங்கூறாமை

திருச்சிற்றம்பலம்


பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே.  1 
கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்
கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே
அருந்தா அலைகடல் ஆறுசென் றாலே.  2 
கருதலர் மாளக் கருவாயில் நின்ற
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனியும்ப ராமே.  3 
பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே.  4 
என்னிலும் என்னுயி ராய இறைவனைப்
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய எவ்வுயி ராய விகிர் தனை
உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே.  5 
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்
வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுத்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.  6 
நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்அறி வாளர் விரும்புகின் றாரே.  7 
விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்
கண்ணற வுள்ளே கருதிடிற் காலையில்
எண்உற வாகமுப் போதும் இயற்றிநீ
பண்ணிடில் தன்மை பராபர னாமே.  8 
ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்தான் அருள்செய்த பேரருளாளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே.  9 
போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே சென்றும் எறிமணி தான்அகக்
காற்றின் விளக்கது காயம் மயக்குறு
மாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.  10 
நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை
கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்
மூடிக்கண் டேனுல கேழுங்கண் டேனே.  11 
ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்
தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுகண்
டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு
வானகஞ் செய்யு மறவனு மாமே.  12 
மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்
தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்
தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்
காமல மற்றார் அமைவுபெற் றாரே.  13 
பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்
டிதமுற்ற பாச இருளைத் துரந்து
மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே
திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.  14 
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.  15 


திருச்சிற்றம்பலம்

Monday, December 14, 2020

Eighth Thanthiram – 29. Upasantham

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 29. உபசாந்தம்


திருச்சிற்றம்பலம்


முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.  1 
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும் உப சாந்தப் பரிசிதே.  2 
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்
தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.  3 
ஆறாற மைந்துஆண வத்தையுள் நீக்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே.  4 
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்
ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்
தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே
ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே.  5 
பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்
திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
உரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்
கரைகண் டானுரை அற்ற கணக்கிலே.  6 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 28. Kariya Karana Upathi

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி


திருச்சிற்றம்பலம்


செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபதி ஏழும் பகருரை
உற்றிடும் காரிய காரணத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.  1 
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுந்த கனாநனா
ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.  2 
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.  3 
உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று
அயிர்ப்பறு காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.  4 
காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறும் பாழில் பராபரத் தானே.  5 


திருச்சிற்றம்பலம்

Sunday, December 13, 2020

Eighth Thanthiram – 27. Muppazh

                                 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 27. முப்பாழ்


திருச்சிற்றம்பலம்


காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.  1 
மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.  2 
எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனப் பாழைக் கடந்து அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.  3 
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.  4 
ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ
தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.  5 
உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்
உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.  6 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 26. Mutchooniya Thondadhsi

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி


திருச்சிற்றம்பலம்


தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்
தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே 
நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.  1 
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி
வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்
இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.  2 
தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே
அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு
அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து
உந்து முறையில் சிவமுன்வைத்து ஓதிடே.  3 
வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே.  4 
தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்
உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.  5 
ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து
ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே.  6 
தாமதம் காமியம் ஆகித் தகுகுண
மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.  7 


திருச்சிற்றம்பலம்

Friday, December 11, 2020

Eighth Thanthiram – 25. Mukkaranam

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 25. முக்கரணம்

திருச்சிற்றம்பலம்


இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுரை பேதமும் ஒன்றென லாமே.  1 
ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதம் தானே.  2 
முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்
கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக
ஒக்குமது உன்மனி ஓதுஉள் சமாதியே.  3 


திருச்சிற்றம்பலம்

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...