THIRUMANTHIRAM

Thursday, December 3, 2020

Eighth Thanthiram – 16. Pthi Pasu Pasam Verinmai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை


திருச்சிற்றம்பலம்


அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே.  1 
பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.  2 
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.  3 
பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தலும்
கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.  4 
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோன் மேவுறான்
சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.  5 
நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே.  6 
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்
ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.  7 
பதிபசு பாசம் பயில்வியா நித்தம்
பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில நிலாவே.  8 
பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.  9 
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே.  10 
படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய
படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே.  11 
ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன்
ஆகிய தூயஈ சானனும் ஆமே.  12 
மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன்
மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அர னாமே.  13 
படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.  14 
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகு மாயையின் முப்பால் மிகுத்திட்டுஅங்கு
ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே.  15 
வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து
ஆட்கு நரக சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே.  16 
நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே.  17 
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோக மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.  18 
பாசம் பயிலுயிர் தானே பரமுதல்
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலால்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே.  19 
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே.  20 


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...