THIRUMANTHIRAM

Tuesday, December 1, 2020

Eighth Thanthiram – 15. Aaru Antham

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 15. ஆறு அந்தம்


திருச்சிற்றம்பலம்


வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட்டு யோகாந்த அந்தமும்
ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே.  1 
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே.  2 
தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய்
ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே.  3 
நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.  4 
மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு
ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே.  5 
உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத்
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்iஉணர் வாகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே.  6 
தேடும் இயம நியமாதி சென்றகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன் 
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.  7 
கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.  8 
தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு
ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு
அளியவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே.  9 
ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.  10 
தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.  11 
தான்அவ னாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.  12 
ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே
ஆறந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே.  13 
உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே.  14 
ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி யருளிய கோனைக் கருதுமே.  15 
கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப
அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில்
வருசமயப் புற மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.  16 
வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.  17 
வேதாந்தம் தன்னில் உபாதிமேல் ஏழ்விட
நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே.  18 
அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி
பண்டுறு நின்ற பராசக்தி என்னவே
கொண்டவன் அன்றிநின் றான்எங்கள் கோவே.  19 
கோஉணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே
பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப
ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே.  20 
ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே.  21 
அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே.  22 
வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே.  23 
சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்துஒன்றானானால்
நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே.  24 
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.  25 
சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான் 
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே.  26 
தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.  27 
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே.  28 
பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.  29 
ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ன
ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே.  30 
அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் தன்னை
ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.  31 
அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த்
தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம்
வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே.  32 
உயிரைப் பரனை உயர்சிவன் தன்னை
அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால்
செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி
அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே.  33 
மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய தான சிவோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள்
துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே.  34 
முதலாகும் வேத முழுதுஆ கமமப்
பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு
முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே.  35 


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...