Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 14. அறிவுதயம்
திருச்சிற்றம்பலம்
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. 1
அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச் சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப் பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே. 2
அறிவு வடிவென்று அறியாத என்னை அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி அறிவு வடிவென்று அருளால் அறிந்தே அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே. 3
அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின் றனமறை ஈறுகள் தாமே. 4
ஆயு மலரின் அணிமலர் தன்மேலே பாய இதழ்கள் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்த மாகியே போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே. 5
மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே. 6
அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின் அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம் அறிவுஅறி வாக அணிமாதி சித்தி அறிவுஅறி வாக அறிந்தனன் நந்தியே. 7
அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம் அறிவுஅறி யாமை யாரும் அறியார் அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால் அறிவுஅறி யாமை அழகிய வாறே. 8
அறிவுஅறி யாமையை நீவி யவனே பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின் செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே. 9
அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது அறிவுடை யார்நெஞ்சு அருந்தவம் ஆவது அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும் அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. 10
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க் காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன் சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும் பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே. 11
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன் என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது என்னையிட்டு என்னை உசாவுகின் றானே. 12
மாய விளக்கது நின்று மறைந்திடும் தூய விளக்கது நின்று சுடர்விடும் காய விளக்கது நின்று கனன்றிடும் சேய விளக்கினைத் தேடுகின் றேனே. 13
தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும் நாடுகின் றேன்நல மேஉடை யானடி பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக் கூடுகின் றேன்குறை யாமனத் தாலே. 14
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர் பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத் தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தாள் மன்னிச் சிவமாக வாரா பிறப்பே. 15
No comments:
Post a Comment