THIRUMANTHIRAM

Wednesday, November 25, 2020

Eighth Thanthiram – 08. Pravtthai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 08. பராவத்தை


திருச்சிற்றம்பலம்


அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்
நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.  1 
சத்தி பராபரம் சாந்தி தனிலான
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன்
சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே.  2 
ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே.  3 
அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சற நாடி நயம்செய்யு மாறே.  4 
உரிய நனாத்துரி யத்தில் இவனாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரனாம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே.  5 
பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் அதீதம் பயிலப் பயிலப்
பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார்
பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே.  6 
ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.  7 
துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே.  8 
நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.  9 
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.  10 
உன்னை அறியாது உடலைமுன் நான்என்றாய்
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.  11 
கருவரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே.  12 
அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆனகனவும்
அணுஅசை வில்பரா தீதம் சுழுத்தி
பணியில் பரதுரி யம்பர மாமே.  13 
பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே.  14 
பரமா நனவின்பின் பால்சக முண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே.  15 
சீவன் துரியம் முதலாகச் சீரான
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்து
ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.  16 
பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
பரம்சிவன் மேலாம் பரநனவாக
விரிந்த கனாவிடர் வீட்டும் சுழுனை
உரந்தகும் மாநந்தி யாம்உண்மை தானே.  17 
சார்வாம் பரசிவஞ் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே.  18 
கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்னை 
அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
குறிப்பது கோலம் அடலது வாமே.  19 
பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம்இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.  20 
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.  21 
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.  22 
ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.  23 
துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்
புரியப் பரையில் பராவத்தா போதம்
திரியப் பரமம் துரியம் தெரியவே.  24 
ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே.  25 
ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை உள்ளுறல் சுத்தமே.  26 
நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.  27 


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...