Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம் - 37. கேடு கண்டு இரங்கல்
திருச்சிற்றம்பலம்
வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார் அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார் முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. 1
போது சடக்கெனப் போகின் றதுகண்டும் வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து ஆதியை அன்பில் அறியகில் லார்களே. 2
கடன்கொண்டு நெற்குத்துக் கையரை யூட்டி உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார் தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. 3
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர் உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே. 4
நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும் என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும் அன்றி உலகம் அதுஇது தேவென்று குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 5
இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்(று) துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 6
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரானடி பேணார் பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 7
ஆர்வ மனமும் அளவில் இளமையும் ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத் தீர வருவதோர் காமத் தொழில்நின்று மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. 8
இப்பரி சேஇள ஞாயிறு போலுரு அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை இப்பரி சேகம லத்துறை ஈசனை மெய்ப்பரி சேவின வாதுஇருந் தோமே. 9
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து ஆடவல் லார்அவர் பேறெது வாமே. 10
நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர் நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும் துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில் அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. 11
மிருக மனிதர் மிக்கோர் பறவை ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர் திருமரு மாதவம் சேர்ந்துஉணர்ந் தாரே. 12
நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச் சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை ஆதி பயனென்று அமரர் பிரான்என்று நாதியே வைத்தது நாடுகின் றேனே. 13
இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் வருந்தேன் நுகராது வாய்புகு தேனை அருந்தேனை யாரும் அறியகி லாரே. 14
கருத்தறி யாது கழிந்தன காலம் அருத்தியுள் ளான்அம ராபதி நாதன் ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம் வருத்திநில் லாது வழுக்கின் றாரே. 15
குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய் விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த விதிர்த்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில் கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே. 16
கரைஅருகு ஆறாக் கழனி விளைந்த திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும் வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின் நரைஉரு வாச்செல்லும் நாள்இல வாமே. 17
வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே. 18
No comments:
Post a Comment