Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 06. சுத்த நனவாதி பருவம்
திருச்சிற்றம்பலம்
நானவாதி தூலமே சூக்கப் பகுதி அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே. 1
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவில் கனவுஓட நன்செய்தி யானதே. 2
செறியுங் கிரியை சிவதத் துவமாம் பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி குறிதல் திருமேனி குணம்பல வாகும் அறிவில் சராசரம் அண்டத் தளவே. 3
ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம் ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம் போதம் கலைகால நியதிமா மாயை நீதிஈ றாக நிறுத்தினன் என்னே. 4
தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம் ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம் மாசகல் வித்தை நியதி மகாமாயை ஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே. 5
ஆணவம் மாயையும் கன்மமு மாமலம் காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. 6
பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 7
உடல்இந் தியமனம் ஒண்புத்தி சித்தம் அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக் கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே. 8
தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம் சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம் பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம் மற்றது உண்டிக் கன(வு)நன வாதலே. 9
நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில் கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை நனவில் துரியம் அதீதம் தலைவந்தே. 10
ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா வேறான ஐந்தும் விடவே நனாவினில் ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே. 11
மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச் சேயகே வலவிந் துடன் சென்றக்கால் ஆய தனுவின் பயனில்லை யாமே. 12
அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா அதீதத் துரியம் அதனால் புரிந்தால் அதீதத்து எழுந்து அறிவாகிய மானன் முதிய அனலில் துரியத்து முற்றுமே. 13
ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம் கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர் பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின் மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே. 14
புரியட் டகமே பொருந்தல் நனவு புரியட் டகந்தன்னில் மூன்று கனவு புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே. 15
நனவில் நனவு புனலில் வழக்கம் நனவிற் கனவு நினைத்தல் மறத்தல் நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமை நனவில் துரியம் அதீதத்து நந்தியே. 16
கனவில் நனவுபோல் காண்டல் நனவாம் கனவினில் கண்டு மறத்தல் கனவாம் கனவில் சுழுத்தியும் காணாமை காணல் அனுமாதி செய்தலில் ஆன துரியமே. 17
சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல் சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில் சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகை சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே. 18
துரிய நனவாம் இதமுணர் போதம் துரியக் கனவாம் அகமுணர் போதம் துரியச் சுழுத்தி வியோமம் துரியம் துரியம் பரமெனத் தோன்றிடும் தானே. 19
அறிவுஅறி கின்ற அறிவு நனவாம் அறிவுஅறி யாமை அடையக் கனவாம் அறிவுஅறிய அவ்வறி யாமை சுழுத்தி அறிவுஅறி வாகும் ஆன துரியமே. 20
தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு ஞானம் தனதுரு வாகி நயந்தபின் தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு மேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலிட்டே. 21
ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில் எய்யும் நனவு கனவு சுழுத்தியாம் மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே. 22
ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும் ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன் ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின் ஈதென்று அறியும் இயல்புடை யோனே. 23
உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய் அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய் நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே. 24
சத்தி இராகத்தில் தான்நல் உயிராகி ஒத்துறு பாச மலம்ஐந்தோடு ஆறாறு தத்துவ பேதம் சமைத்துக் கருவியும் வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே. 25
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச் சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச் சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே. 26
மலக்கலப் பாலே மறைந்தது சத்தி மலக்கலப் பாலே மறைந்தது ஞானம் மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே. 27
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. 28
கதறு பதினெட்டுக் கண்களும் போகச் சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும் விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால் அதிர வருவதோர் ஆனையும் ஆமே. 29
நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக் கனவகத் தேஉள் கரணங்க ளோடு முனவகத் தேநின்று உதறியுட் புக்கு நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே. 30
நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய் ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச் சென்று துரியாதீ தத்தே சிலகாலம் நின்று பரனாய் நின்மல னாமே. 31
ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத் தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி மோனம் அடைந்தொளி மூலத்த னாமே. 32
மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக் கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற விண்டலர் தாமரை மேலொன்றும் கீழாகத் தண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே. 33
போதறி யாது புலம்பின புள்ளினம் மாது அறி யாவகை நின்று மயங்கின வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை சூதறி வாருச்சி சூடிநின் றாரே. 34
கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே பொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித் திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை வருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றானே. 35
ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத் தான விளக்கொளி யாம்மூல சாதனத்து ஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே. 36
உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய விண்நாட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில் கண்ணாடி காணும் கருத்ததுஎன் றானே. 37
அறியாத வற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான் அறியா தவத்தை அறிவானைக் கூட்டி அறியாது அறிவானை யார்அறிவாரே. 38
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம் அரியன தூடணம் அந்நன வாதி பெரியன கால பரம்பிற்றுரியம் அரிய அதீதம் அதீதத்த தாமே. 39
மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன் மாயையின் மற்றது நீவுதல் மாயையாம் கேவல மாகும் சகலமா யோனியுள் தோயும் மனிதர் துரியத்துள் சீவனே. 40
No comments:
Post a Comment