THIRUMANTHIRAM

Tuesday, November 3, 2020

Seventh Thanthiram – 35. Sarguru Neri

 Thirumanthiram of Thirumoolar


7ம் தந்திரம் - 35. சற்குரு நெறி


திருச்சிற்றம்பலம்


தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே.  1 
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான் பிற வித்துயர் தானே.  2 
கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்துஇரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியல் வந்தணு கானே.  3 
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே.  4 
நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற
நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே
ஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.  5 
பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே.  6 
தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே.  7 
வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைக்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலும் ஆமே.  8 
குருஎன் பவனே வேதாக மங்கூறும்
பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயர்பாச நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே.  9 
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே.  10 
உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்றறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே.  11 
எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம்
வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச்
சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே
செல்லாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே.  12 
ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித்
தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே.  13 
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே.  14 
ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே.  15 
மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது
பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்தார் 
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே.  16 
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே
அசைத்துஇரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே.  17 
ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே.  18


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...