Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 07. கேவல சகல சுத்தம்
திருச்சிற்றம்பலம்
தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும் பின்னம் உறநின்ற பேத சகலனும் மன்னிய சத்தசத் துச்சத சத்துடன் துன்னவர் தத்தம் தொழில்கள வாகவே. 1
தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. 2
ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்றுக் காமியம் மாமேய மும்கல வாநிற்பத் தாம்உறு பாசம் சகலத்து ஆமே. 3
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர் நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள் நிகழ்நரர் கீடம் அந்தமும் ஆமே. 4
தாவிய மாயையில் தங்கும் பிரளயம் மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே. 5
ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர் ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர் ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர் ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே. 6
ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர் போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு ஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம் தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே. 7
ஒரினும் மூவகை நால்வகை யும்உள தேரில் இவைகே வலமாயை சேர்இச்சை சார்இய லாயவை தாமே தணப்பவை வாரிவைத்து ஈசன் மலம்அறுத் தானே. 8
பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே. 9
அனாதி பசுவியாத்தி யாகும் இவனை அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆகுமே. 10
அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத் தின்பால் துரியத் திடையே அறிவுறத் தன்பால் தனையறி தத்துவந் தானே. 11
ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் மெய்கண்டு சுத்த வித்தையில் வீடாகும் துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி ஐயன் சிவஞ் சத்தி யாம்தோற்றம் அவ்வாறே. 12
ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும் மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில் கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே. 13
ஆணவத் தார்ஒன்று அறியாத கேவலர் பேணிய மாயைப் பிரளயா கலராகும் காணும் உருவினர் காணாமை காண்பவே பூணும் சகலமும் பாசமும் புக்கோரே. 14
ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப் பேணிய மாயை பிரளயா கலருக்கே ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே 15
கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர் கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால் ஆவயிற் கேவலத்து அச்சக லத்தையும் மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே. 16
மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்து மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ மாய சகலத்துக் காமிய மாமாயை ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே. 17
மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர் அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர் மெய்ம்மையில் வேதா விரிமால் கீடாந்தத்து அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே. 18
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச் சத்துஅசத்து ஓடத் தனித்தளை பாசமும் மத்த இருள்சிவ னான கதிராலே தொத்தற விட்டிடச் சுத்தர் ஆவார்களே. 19
தற்கே வலம்முத்தி தானே தனிமையாம் பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம் சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே. 20
அறிவின்றி அமுத்தன் அராகாதி சேரான் குறியொன்றி லாநித்தன் கூடான் காலதி செறியும் செயலிலான் தினக்கற்ற லில்லோன் கிறியன் மலவியாபி கேவலத் தானே. 21
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் சந்தத ஞான பரையும் தனுச்சத்தி விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர் வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே. 22
கேவல மாதியின் பேதம் கிளக்குறில் கேவல மூன்றும் கிளரும் சகலத்துள் ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே ஓவலில் லாஒன்பான் உற்றுணர் வோர்கட்கே. 23
கேவலத்தில் கேவலம் அதீதா தீதம் கேவலத் தில்சகலங்கள் வயிந்தவம் கேவலத் திற்சுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்கு ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே. 24
சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம் சகல சகலமே சாக்கிர சாக்கிரம் சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே. 25
சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல் சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம் சுத்த சகலம் துரிய விலாசமாம் சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே. 26
சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ் சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே. 27
சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம் சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது ஆக்கு பரோபதி யாம்உப சாந்தத்தை நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே. 28
பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும் சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும் அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின் சித்தமும் இல்லை செயல்இல்லை தானே. 29
எய்திய பெத்தமும் முத்தமும் என்பன எய்தும் அரன்அரு ளேவிளை யாட்டோ(டு) எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே எய்தும் உயிர்இறை பால்அறி வாமே. 30
ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர் ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார் ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யான்பவர் ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே. 31
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும் உரிய சுழுனை முதல்எட்டும் சூக்கத்து அரிய கனாத்தூலம் அந்நன வாமே. 32
ஆணவம் ஆகும் அதீதம்மேல் மாயையும் பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம் பேணும் கனவும் மாமாயை திரோதாயி காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே. 33
அரன்முத லாக அறிவோன் அதீதத்தன் அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோர் அருளும் அறைவார் சகலத்துற் றாரே. 34
உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக் கருவுற் றிடுஞ் சீவன் காணும் சகலத்தே. 35
இருவினை ஒத்திட இன்னருள் சத்தி மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக் குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. 36
ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு ஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப் பேறான ஐவரும் போம்பிர காசத்து நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே. 37
தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான் தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான் உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால் பின்னையும் வந்து பிறந்திடும் தானே. 38
சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில் ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம் நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம் வாக்கும் மனமும் மருவல்செய் யாவே. 39
அப்பும் அனலும் அகலத்து ளேவரும் அப்பும் அனலும் அகலத்து ளேவாரா அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில் அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே. 40
அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம் உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம் பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே. 41
மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே. 42
No comments:
Post a Comment