THIRUMANTHIRAM

Sunday, November 15, 2020

Eighth Thanthiram – 03. Avatthai Petham – Keezhal Avatthai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 03. அவத்தை பேதம் - கீழால் அவத்தை


திருச்சிற்றம்பலம்


ஐயைந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை
மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே.  1 
முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்
செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே.  2 
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தஅச் சாக்கரப்1 பாலது ஆகுமே.  3 
பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே.  4 
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்1 
ஏதம் படஞ்செய்து இருந்த புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமோடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.  5 
இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.  6 
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.  7 
இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே.  8 
ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாலை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளி னால்அறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.  9 
மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்
உன்னின் முடிந்தது ஒருபூத சயமே.  10 
முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே.  11 
கண்டகனவு  ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய தாகிப் பரந்த வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே.  12 
நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்து
ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.  13 
தானம் இழந்து தனிபுக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி
ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தின் 
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே.  14 
சுழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே.  15 
தானத்து எழுந்து தருக்குந் துரியத்தின்
வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே.  16 
ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே.  17 
துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.  18 
மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்
வேறாய மாயா தனுகர ணாதிக்குஇங்கு
ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.  19 
உண்ணும்தன் ஊடாடாது ஊட்டிடு மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து
எண்ணுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே.  20 
அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
இதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாகா ஐஅவத் தைப்படு வானே.  21 
ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.  22 
மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என
விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்
அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே.  23 
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.  24 
நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்
நேரான வாறுஉன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.  25 


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...