THIRUMANTHIRAM

Sunday, November 8, 2020

Seventh Thanthiram – 36. Kooda Olukkam

  Thirumanthiram of Thirumoolar


7ம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்


திருச்சிற்றம்பலம்


கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே.  1 
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.  2 
பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே.  3 
வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானமி ல்லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.  4 
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.  5 
கண்காணி யாகவே கையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே.  6 
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை
தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்புஅறி யாரே.  7 
காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.  8 
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே.  9 
பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்
சுராமயம் உன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே.  10 
ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே.  11 
உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்
அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே.  12 
உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்
உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.  13 
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் நேருற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே.  14 
தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே.  15 
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கன்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நன்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.  16 
இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம மன்னும் ஆறாறு முடிவிலே.  17 


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...