THIRUMANTHIRAM

Sunday, November 8, 2020

Seventh Thanthiram – 38. Ithopathesam

 Thirumanthiram of Thirumoolar


7ம் தந்திரம் - 38. இதோபதேசம்


திருச்சிற்றம்பலம்


மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.  1 
செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரநெறி நாடுமின் நீரே.  2 
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.  3 
போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை
நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக்
காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே.  4 
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.  5 
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே.  6 
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே.  7 
கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது ஆமே.  8 
விடுகின்ற சீவனார் மேல்எழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.  9 
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.  10 
இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புறு விர்தவம் செய்யுமெய்ஞ் ஞானத்துப்
பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று
துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே.  11 
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே.  12 
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.  13 
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி அதுவிரும் பாரே.  14 
நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.  15 
இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை
நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே.  16 
பஞ்சமும் ஆம்புவி சற்குருபால்முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.  17 
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.  18 
நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலில் கண்டு
குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்
பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே.  19 
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண்டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.    20

ஏழாம் தந்திரம் முற்றிற்று  


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...