Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 27. முப்பாழ்
திருச்சிற்றம்பலம்
காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக் காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டறும் சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே. 1
மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன் சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன் ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத் தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே. 2
எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும் பதியெனும் நந்தி பதமது கூடக் கதியெனப் பாழைக் கடந்து அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே. 3
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர் அரிய பரம்பரம் என்றே துதிக்கும் அருநிலம் என்பதை யார்அறி வாரே. 4
ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன் ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ தேறாச் சிவாய நமவெனத் தேறிலே. 5
உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும் உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப் பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை உள்ளமும் இல்லை உருவில்லை தானே. 6
No comments:
Post a Comment