Thirumanthiram of Thirumoolar
8ம் தந்திரம் - 20. முப்பரம்
திருச்சிற்றம்பலம்
தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர் மூன்று படிமண் டலத்து முதல்வனை ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி நான்று நலம்செய் நலந்தரு மாறே. 1
மன்று நிறைந்தது மாபர மாயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் கன்று நினைந்தெழு தாயென வந்தபின் குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே. 2
ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்பரம் கூறா உபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. 3
பற்றறப் பற்றில் பரம்பதி யாவது பற்றறப் பற்றில் பரனறி வேபரம் பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே பற்றறப் பற்றில் பரம்பர மாமே. 4
பரம்பர மான பதிபாசம் பற்றாப் பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப் பரம்பர மான பரசிவா னந்தம் பரம்பர மாகப் படைப்பது அறிவே. 5
நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந் தனையுற்று இடத்தானே தற்பர மாமே. 6
தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும் பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத் தற்பரன் கால பரமும் கலந்தற்ற நற்பரா தீதமும் நாடுஅக ராதியே. 7
No comments:
Post a Comment