Thirumanthiram
of Thirumoolar
7ம் தந்திரம்
- 11. சிவபூசை
திருச்சிற்றம்பலம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 1
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாகுமே. 2
பான்மொழி பாகன் பராபரன் தானாகும்
ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே. 3
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. 4
மஞ்சன மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும்
அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. 5
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. 6
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே
முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே. 7
மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. 8
ஆரா தனையும் அமரர் குழாங்களும்
தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமும்
ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. 9
ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர்
பார்ஐங் குணமும் படைத்துநின் றானே. 10
உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. 11
வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார்
அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே. 12
கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்பழி வீழ
வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. 13
பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்குஅரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. 14
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன்
மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 15
தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. 16
உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. 17
வென்று விரைந்து விரைப்பணி என்றனர்
நின்று பொருந்த இறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடில்
கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே. 18
சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்தழுக்கு அற்றக்கான்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே. 19
ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. 20
சாண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே. 21
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. 22
சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி
சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. 23
ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழில் உயிரை உணர்வும் தான்ஒட்டா
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே. 24
திருச்சிற்றம்பலம்