Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 08. சம்பிரதாயம் (பண்டை முறை)
திருச்சிற்றம்பலம்
உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. 1
உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான வியவார் பரமும்பின் மேவும் பிராணன் செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே உயலார் குருபரன் உய்யக் கொண்டானே. 2
பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன் நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள் உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது வைச்ச பதமிது வாய்திற வாதே. 3
பெட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித் தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே. 4
தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே. 5
கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால் பாடல் உடலினில் பற்றற நீக்கியே கூடிய தானவ னாம்குளிக் கொண்டே. 6
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக் கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக் கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால் கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே. 7
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மை பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. 8
உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே. 9
காயப் பரப்பில் அலைந்து துரியத்துச் சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத் தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே. 10
நானென நீயென வேறில்லை நண்ணுதல் ஊனென ஊனுயிர் என்ன உடனின்று வானென வானவர் நின்று மனிதர்கள் தேனென இன்பம் திளைக்கின்ற வாறே. 11
அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவனிவன் ஆமே. 12
நானிது தானென நின்றவன் நாடோ றும் ஊனிது தானுயிர் போலுணர் வானுளன் வானிரு மாமுகில் போற்பொழி வானுளன் நானிது அம்பர நாதனும் ஆமே. 13
பெருந்தன்மை தானென யானென வேறாய் இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும் பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 14
No comments:
Post a Comment