Thirumanthiram
of Thirumoolar
7ம் தந்திரம்
- 10. அருள் ஒளி
திருச்சிற்றம்பலம்
அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார் அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார் அருளின் பெருமை அறியார் செறியார் அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே. 1
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில் ஆரா அருட்கடல் ஆடுகென் றானே. 2
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்தென் ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே. 3
உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும் பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி அத்தனை நீயென்று அடிவைத்தான் பேர்நந்தி கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. 4
விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினை முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. 5
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும் ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. 6
புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே. 7
அருளது என்ற அகலிடம் ஒன்றும் பொருளது என்ற புகலிடம் ஒன்றும் மருளது நீங்க மனம்புகுந் தானைத் தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே. 8
கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும் பாறணி யும்உடல் வீழவிட் டாருயிர் தேறணியோம்இது செப்பவல் லீரே. 9
No comments:
Post a Comment