Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 01. ஆறு ஆதாரம்
திருச்சிற்றம்பலம்
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் காலங்கண் டான்அடி காணலும் ஆமே. 1
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் மேதாதி நாதாந்த மீதாம் பராசக்தி போதா லயத்த விகாரந் தனிற்போத மேதாதி ஆதார மீதான உண்மையே. 2
மேல்என்றும் கீழ்என்று இரண்டறக் காணுங்கால் தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும் பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரங் கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே. 3
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம் புந்தி சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே. 4
மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி ஆதார சோதனை அத்துவ சோதனை தாதார மாகவே தானெழச் சாதித்தால் ஆதாரஞ் செய்போக மாவது காயமே. 5
ஆறந்த மும்கூடி யாகும் உடம்பினிற் கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின் ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே. 6
ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்திய வாறுதான் ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே. 7
ஆயு மலரின் அணிமலர் மேலது வாய இதழும் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்த மாகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே. 8
No comments:
Post a Comment