Thirumanthiram
of Thirumoolar
7ம் தந்திரம்
- 07. சிவலிங்கம் (சிவகுரு)
திருச்சிற்றம்பலம்
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும் நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே. 1
வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப் புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. 2
ஒன்றெனக் கண்டேயெம் ஈசன் ஒருவனை நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ வென்றுஐம் புலனும் மிகக்கிடந்து இன்புற அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. 3
மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. 4
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று ஆவி எழும்அள வன்றே உடலுற மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித்து அடக்கிற் பரகதி தானே. 5
No comments:
Post a Comment